Saturday, June 16, 2007

பள்ளிசேர்க்கை

எனது கிராமத்துக்கு அருகில் உள்ள நகரின் பள்ளியொன்றில் பையனின் பள்ளிசேர்க்கை இம்மாத துவக்கத்தில் நிறைவேறியது. துவக்கத்திலேயே அவனை சேர்க்க முடிகிற பள்ளி அவனின் கல்விக்கு சிறப்பாயமையட்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்டதில் எதிர்பார்த்த பள்ளியில் இவ்வருடமும் இடம் கிடைக்கவில்லையாயினும் வருத்தமேதுமில்லை.

ஆனால் சாதாரண பள்ளிக்கல்வி வழங்கும் கல்விச்சாலையிலே கூட சேர்க்கைக்கு நேர்மையான வழிகளும்,நம்பிக்கையூட்டும் செயல்களும் காணப்படவில்லை என்பது சற்றே வருத்தம் கொள்ள வைத்தது.

Sunday, December 17, 2006

உண்மையான தேவைகள்

சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கிராமத்து இளைஞர்கள் இருவரின் முயற்சியால் துவக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இன்றும் சுற்றுப்புற கிராமங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிவருகிறது.

அந்த இளைஞர்கள் இதற்காக பட்ட துயரங்கள் ஏராளம். அதில் ஒரு இளைஞரின் தலைமையில் சங்கம் பல ஆண்டுகள் குறிப்பிட்ட லாபம் பெற்று ஆண்டுதோறும் பொங்களுக்கு முன் லாபத்தொகை பிரிக்கபட்டு ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஆண்டுமுழுதும் வழங்கிய பாலுக்கு கணக்கிடப்பட்டு போனசாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையை அடைய அவரின் தீவிர முயற்சியும், கடின உழைப்பும்,தன் உழைப்பை முழுக்க முழுக்க இதற்காகவே அர்பணித்த உள்ளமும் உண்மையில் போற்றத்தக்கவை.இடையில் சிலமுறை அரசாங்கம் நள்ளிரவில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைத்து விட்டு கட்சிக்காரர்களை பதவியில் அமர்த்திய நிலையிலும் இன்றும் இச்சங்கம் சிறிதும் தளராமல் நாள் ஒன்றுக்கு சுமார் 1000 லிட்டர் பால் உற்பத்தி செய்யபடும் சிறப்பான நிலையில் உள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த நிலையிலும் சுமார் 1000 கால்நடைகளையும் , 5000 மக்கள் தொகையும் கொண்ட இக்கிராமத்து மக்களின் நீண்ட நாள் கனவான ஒரு முழு நேர கால்நடை மருத்துவமனை இன்னமும் இக் கிராமத்துக்கு கிடைக்கவில்லை என்பது வேதனைதான்.

கிராமங்களின் உண்மையான தேவைகள் என்ன? என்று கவலைப்படாத அதிகாரிகளும்,மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும் இருந்தும் என்னபயன்?

மாதங்களில் மார்கழி


இனிமையும்,இதமும் நிறைந்த ரம்மியமான இம்மார்கழி மாதத்தின் அதிகாலை நேரம் மனதுக்கு அமைதியை தருவது இயல்பே.அதனால்தானோ என்னவோ கண்ணனே மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்கிறான்.இப்பூவுலகில் ஒரு வருடம் என்பது தேவலோகத்துக்கு ஒரு நாள்.ஆகவே இம்மார்கழி மாதம் தேவலோகத்தில் ஒரு நாளின் அதிகாலை பொழுதாகிறது.இந்த அதிகாலை நேரம் நம்மை போன்றே கண்ணனுக்கும் இனிமையாய் இருப்பதில் வியப்பேதும் இல்லையே.நாமும் இம்மார்கழி மாதத்தின் அதிகாலை இனிமையை அனுபவிப்போமாக.

Saturday, December 09, 2006

மழைக்காலம்

கடந்த ஐப்பசி மாதம் முழுதும் விடாது பெய்த மழையின் காரணமாக எங்கள் கிராமத்தில் பலர் சில நாட்களாக காய்ச்சல் மற்றும் கண்நோய் பாதித்து சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்.

இதில் ஒரு சுவையான தகவல் என்னவெனில் இப்பொழுது வருகின்ற இதுபோன்ற காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனைகளில்தான் மருந்து உள்ளது,அங்கு சிகிச்சை பெற்றால்தான் சரியாகிறது என்ற ஒரு தகவல் அனைவருக்கும் பரவி அரசாங்க மருத்துவமனை பக்கம் திரும்பிபார்க்காதவர்கள் கூட அங்கு தேடி செல்வதில் 6 கிமீ தூரம் உள்ள அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நாள்தோறும் நிரம்பி வழிவதை இன்றும் காண முடிகிறது.

கிராமத்து மக்களின் பொருளாதாரத்தை குறிப்பிட்ட அளவுக்கு இழக்க வைப்பதில் மருத்துவ செலவுகள் முக்கிய காரணமாய் உள்ளது.அரசாங்கம் இலவச தொலைக்காட்சி பெட்டியும்,இலவச சமையல் எரிவாயு இணைப்பும் வழங்குவதில் காட்டும் வேகத்தை குறைந்தபட்சம் ஒவ்வொரு பஞ்சாயத்து கிராமத்திலாவது அரசு மருத்துவமனை துவக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் கிராமப்புற மக்களுக்கு பேருதவியாய் இருக்கும்.

Friday, December 08, 2006

தட்டுப்பாடு

சில மாதங்களாக சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் சிரமங்கள்.கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாய் எங்கள் பகுதியில் வினியோகம் செய்யும் இரு ஏஜென்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கிய இரு வருடத்துக்கு முந்தைய நிலை மெல்ல மெல்ல இன்று மாறி 15 நாள்,20 நாள் ,21 நாளைக்கு பிறகு பதிந்தால், 21 நாட்களுக்கு பிறகு பதிந்து 10 நாள் கழித்து,இதுவும் தற்போது பதிந்து 21 நாளுக்கு பிறகு என இன்றைய தேதி வரை விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி .என்னதான் உண்மையான காரணம்.?

பத்திரிக்கைகளில் அரசின் பதிலோ தட்டுப்பாடு இல்லை என்கிறது.வீட்டு உபயோக பயன்பாடு வர்த்தக நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்த படுவதால் தட்டுப்பாட்டு என ஒரு காரணம்.மானியம் அளிப்பதால் இழப்பை தவிர்க்க உற்பத்தியை குறைத்ததால் தட்டுப்பாடு என ஒரு புறம் குற்றச்சாட்டு.

எது எப்படியோ சமையல் எரிவாயு உருளை சரிவர கிடைக்காமல் தாய்மார்கள் அல்லல் படுவதுதான் இன்றைய உண்மை நிலை

Friday, December 01, 2006

மருந்து

ஒரிரு மாதங்களாக அடிக்கடி தொல்லை தரும் ஈறுவீக்கம்.மருத்துவரிடம் போவதை தள்ளிபோட்டுக்கொண்டே வந்தேன்.சித்தப்பா சொன்ன நாட்டுவைத்தியமான நாயுருவி தழையை வலிஉள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்ததில் தற்காலிக நிவாரணம் கிட்டியது.

சோதனையாக அடுத்த 20 தினங்களில் வேறுஇடத்தில் இதே தொல்லை.சரி இனியும் மருத்துவரை சந்திக்காமல் இருப்பது நல்லதல்ல என்று எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவிலுள்ள நகரத்திற்கு சென்று மருத்துவரை சந்தித்தேன்.

அடிக்கடி வீக்கம் வருகிறதா? ஆமாம்.காரணம் பற்காரை தான் 5 நாட்களுக்கு மாத்திரை தருகிறேன்.பின் பற்களை ஒரு முறை சுத்தம் செய்துவிடலாம் மருத்துவரிடம் மேற்கண்ட உரையாடல்கள் முடிந்து அவர் அளித்த மாத்திரைகளை பெற்றுக்கொண்டு (250 ரூபாய் செலவில் )சரியாகிவிட்டால் போதும் என்ற கனவோடு வீடு வந்துசேர்ந்தேன்.

அன்று இரவு சாப்பிடவேண்டிய மாத்திரைகளை சாப்பிடவில்லை.காரணம் மாத்திரை என்றாலே ஒரு பயம் மனதில் சிறுவயதிலிருந்து,மேலும் இந்த மாத்திரையை சாப்பிட்டு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் இரவு நேரத்தில் என்ன செய்வது மருத்துவரை தேடி ஓட வேண்டுமானால் குறைந்தது 7 (அ) 8 கி.மீ போகவேண்டும் எனவே மறுநாள் முதல் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்.அடுத்தநாள் எந்த பிரச்சினையும் இல்லை என்றதில் மனதில் ஒரு தைரியம்.இது அடுத்த நாள்வரை நீடிக்கவில்லை.

இரண்டாம் நாள் முதல் வயிற்றில் வலி ஆரம்பித்தது.நாள் முழுக்க நீடித்தது.மாத்திரை எடுத்துக்கொள்வதை நிறுத்தவில்லை.மறுநாள் வாய் முழுக்க புண்கள் தோன்றியதும் இனியும் மாத்திரை எடுத்துகொள்வது ஆபத்து என முடிவு செய்து நிறுத்திவிட்டு மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதும் அவரும் அதையே கூற 4 நாட்கள் வாயை சரியாக திறக்கமுடியாததில் அரிசிகஞ்சிதான் கைகொடுத்தது.காரம் இல்லாத உணவு,மணத்தக்காளி கீரை கூட்டு,நெய்,இவை சேர்ந்த உணவு 4,5 நாட்களுக்கு.மெல்ல மெல்ல வாய்புண்கள் குணமானாலும் மாத்திரையின் பக்க விளைவுகள் ஏற்படுத்திய மன, உடல் பாதிப்புகள் பல்வலியையே தாங்கிவிட்டிருக்கலாம் என்ற நிலையைதான் எற்படுத்திவிட்டது.