Friday, December 01, 2006

மருந்து

ஒரிரு மாதங்களாக அடிக்கடி தொல்லை தரும் ஈறுவீக்கம்.மருத்துவரிடம் போவதை தள்ளிபோட்டுக்கொண்டே வந்தேன்.சித்தப்பா சொன்ன நாட்டுவைத்தியமான நாயுருவி தழையை வலிஉள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்ததில் தற்காலிக நிவாரணம் கிட்டியது.

சோதனையாக அடுத்த 20 தினங்களில் வேறுஇடத்தில் இதே தொல்லை.சரி இனியும் மருத்துவரை சந்திக்காமல் இருப்பது நல்லதல்ல என்று எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவிலுள்ள நகரத்திற்கு சென்று மருத்துவரை சந்தித்தேன்.

அடிக்கடி வீக்கம் வருகிறதா? ஆமாம்.காரணம் பற்காரை தான் 5 நாட்களுக்கு மாத்திரை தருகிறேன்.பின் பற்களை ஒரு முறை சுத்தம் செய்துவிடலாம் மருத்துவரிடம் மேற்கண்ட உரையாடல்கள் முடிந்து அவர் அளித்த மாத்திரைகளை பெற்றுக்கொண்டு (250 ரூபாய் செலவில் )சரியாகிவிட்டால் போதும் என்ற கனவோடு வீடு வந்துசேர்ந்தேன்.

அன்று இரவு சாப்பிடவேண்டிய மாத்திரைகளை சாப்பிடவில்லை.காரணம் மாத்திரை என்றாலே ஒரு பயம் மனதில் சிறுவயதிலிருந்து,மேலும் இந்த மாத்திரையை சாப்பிட்டு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் இரவு நேரத்தில் என்ன செய்வது மருத்துவரை தேடி ஓட வேண்டுமானால் குறைந்தது 7 (அ) 8 கி.மீ போகவேண்டும் எனவே மறுநாள் முதல் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்.அடுத்தநாள் எந்த பிரச்சினையும் இல்லை என்றதில் மனதில் ஒரு தைரியம்.இது அடுத்த நாள்வரை நீடிக்கவில்லை.

இரண்டாம் நாள் முதல் வயிற்றில் வலி ஆரம்பித்தது.நாள் முழுக்க நீடித்தது.மாத்திரை எடுத்துக்கொள்வதை நிறுத்தவில்லை.மறுநாள் வாய் முழுக்க புண்கள் தோன்றியதும் இனியும் மாத்திரை எடுத்துகொள்வது ஆபத்து என முடிவு செய்து நிறுத்திவிட்டு மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதும் அவரும் அதையே கூற 4 நாட்கள் வாயை சரியாக திறக்கமுடியாததில் அரிசிகஞ்சிதான் கைகொடுத்தது.காரம் இல்லாத உணவு,மணத்தக்காளி கீரை கூட்டு,நெய்,இவை சேர்ந்த உணவு 4,5 நாட்களுக்கு.மெல்ல மெல்ல வாய்புண்கள் குணமானாலும் மாத்திரையின் பக்க விளைவுகள் ஏற்படுத்திய மன, உடல் பாதிப்புகள் பல்வலியையே தாங்கிவிட்டிருக்கலாம் என்ற நிலையைதான் எற்படுத்திவிட்டது.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

தலைவலி போய், திருகு வலி வந்தது.
நீங்கள் இனிமேல் ஜாக்கிரதையாக
இருக்கலாம்.

அதுவும் மருத்துவ மனை தள்ளி இருக்கும்போது இன்னும் கவலைதான்.

ஸ்ரீ said...

வாங்க வல்லிசிம்ஹன் என்ன செய்வது கிராமங்களில் இருப்பதால் இது போன்ற பிரச்னைகளை எதிர் நோக்கவேண்டியுள்ளது.